மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் : காற்றில் பறந்த உத்தரவு !


மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தை ஒழிக்க கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், இந்த உத்தரவு இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த சமூக அவலத்தை தடுக்க, உச்ச நீதிமன்றம்  அளித்த பரிந்துரைகள் மற்றும் அதன் தற்போதைய நிலை என்ன என்பதனை இப்போது பார்க்கலாம்.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த கொடுமையை எதிர்த்து, டெல்லியைச் சேர்ந்த சஃபாய் கர்மாசாரி அந்தோலன் (Safai Karmachari Andolan ) என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு கடந்த 1993 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறுவோருக்கு ஓராண்டு சிறை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறையை செயல்படுத்த, மத்திய அரசு 600 கோடி ரூபாயை ஒதுக்கியது. ஆனால், ராஜஸ்தான், அரியானா மாநிலங்கள் மட்டுமே இதனை கடுமையாக நடைமுறைப்படுத்தின.  பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டன. இதனால், கடந்த 1992ஆம் ஆண்டில் 5 லட்சத்து 88 ஆயிரமாக இருந்த மனித கழிவு அகற்றும்  தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2002ஆம் ஆண்டில் 7 லட்சத்து 87 ஆயிரமாக உயர்ந்தது.
இதனையடுத்து, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் Safai Karmachari Andolan அமைப்பு முறையிட்டது. இந்த முறை, மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  மனிதக் கழிவுகளை அள்ளுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில சுகாதாரத்துறைச் செயலாளர்கள், மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது ஆனாலும், மத்திய, மாநில அரசுகளின் தொடர் அலட்சியத்தால், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் சமூக அவலமும்,  இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் இன்றும் தொடர்கதையாகவே உள்ளன.

புதியதலைமுறை September 26, 2012 12:40 pm

No comments:

Post a Comment